தனித்து விடப்படும் கிளி.பாரதிபுரம்-

1970  களில் இனக்கலவரத்தால் தென்பகுதியில் இருந்துவிரட்டியடிக்கப்பட்ட மக்கள் யாருடைய உதவியுமின்றி  தம்முடைய முயற்சியினால்  காடுகளை வெட்டி உருவாக்கிய கிராமம் தான் கிளிநொச்சி பாரதிபுரம்




ஆரம்ப கால வாழ்க்கை 

ஓரளவிற்கு நன்றாக அமைந்திருந்தாலும் யுத்தத்திற்கு பின்னர் துயரம் சுமந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் யுத்தத்திற்கு முன்னரும் பின்னருமான இவர்களது வாழ்வுப்பாதை வேறுபட்டதாகவே உள்ளது. 

18 தடவைகள் இடப்பெயர்வுகளை 

சந்தித்திருக்கின்றார்கள் இதனால் இவர்களது அனைத்து உடமைகளும் இல்லாமலாக்கப்பட்டு இன்று ஏக்கத்துடன் தமது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றார்கள்.

2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர் 2011ம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். ஆரம்பகட்டத்தில் பல நிறுவனங்கள் உதவிகளை வழங்கியிருந்தாலும் காலப்போக்கில் இவர்களை எவருமே கண்டுகொள்ளவில்லை.

மூன்று பகுதிகளைக்கொண்ட இக்கிராமம் 750 குடும்பங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இன்றைய காலப்பகுதியில் இவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்த பிரச்சினைகளை உரிய வகையில் அரசுதரப்பிடம் கூறியும் எவருமே கண்டுகொள்ளவில்லை. 

பிரச்சினைகளுக்குள் மூழ்கியிருக்கும் பாரதிபுரம்

பாரதிபுரம் இன்று எல்லோராலும் கண்டுகொள்ளாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது,ஓரிரு அரசியல் தலைவர்கள் மட்டும் தேர்தல் காலங்களில் வந்து போகின்றனர். அவர்களது தேவைகள் நிறைவேறிய பின்னர் மறந்து போகின்றனர்.

இந்த கிராமத்தின் மிக முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று நீர்ப்பிரச்சினையாகும். பாரதிபுரம் வடக்கு,மத்தி,மேற்கு என்ற பகுதிகளைக்கொண்டிருக்கின்றது. இதில் வடக்கு தவிர்ந்த மற்றைய பகுதிகள் அனைத்தும் உவர் நீர் பிரதேசமாகும். 

இதனால் அப்பகுதி மக்கள் வடபகுதி எல்லைக்கோ அல்லது வேறு இடங்களை நோக்கியே  தண்ணீரை  பெற்றுக்கொள்ள செல்ல வேண்டியிருக்கின்றது. அத்தோடு  தொழிலின்மை போதிய வருமானம் இன்மை, போக்கு வரத்துப்பிரச்சினைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

மின்சாரத்தை எதிர்பார்த்திருக்கின்றோம்

நகரின் அண்மையில் காணப்படும் இந்த கிராமத்திற்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பிரதான பாதையில் இருந்து 250 மீற்றர் தூரம் வரையிலேயே மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மற்றைய பகுதிகளுக்கு இல்லை இதனால் இந்த கிராமம் இருளில் மூழ்கியே காணப்படுகின்றது. 

மின்சாரத்தை பெற்றுத்தருமாறு பல தமிழ் அரசியல் தலைவர்களிடமும், அரசாங்க செயலகத்திடமும் முறையிட்டும் எந்தப் பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சிறுவயதிலே கூலிவேலைக்கு செல்லும் சிறுவர்கள்.

இந்த கிராமத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கல்வி. இங்கு கல்வி கற்பதற்கான எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இக் கிராமத்தில் இருக்கின்ற பாடசாலை சாதாரண தரம் வரையிலேயே காணப்படுகின்றது மேலதிகக் கல்வியை தொடர வேண்டியிருந்தால் நகரப்புற பாடசாலைக்கே செல்லவேண்டும். 

இதனால் ஓரிரு மாணவர்களே உயர்தர பாடசாலையை நோக்கி செல்லுகின்றனர். மற்றைய மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடையிலேயே வீடடின்  வறுமையால் கூலிவேலைக்கு செல்லுகின்றனர். கிராமத்தின் மத்தியில் இருக்கின்ற தனியார் கல்விநிலையம் ஒரு மாணவனுக்கு 750 ரூபாய் அறவிடுகின்றது. அந்த அளவு பணம் கொடுக்க முடியாத நிலையால் பிள்ளைகளை பகுதி நேர வகுப்புக்கு செல்ல பெற்றோரால் அனுப்ப முடியாமல் இருக்கின்றது. 

முன்னால் போராளிகளும் விதவைகளும்

போருக்குப்பின்னர்  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பல இளைஞர்கள் இக் கிராம வாழ்க்கைக்குள் உள்நுழைந்திருக்கின்றார்கள் இதனால் இவர்கள் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.  பதிவுகள் விசாரணைகள் என தொடர்ச்சியாக படியேறிக்கொண்டே இருக்கின்றனர். 

ஏதும் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது   விசாரணைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இவர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். அத்தோடு, இங்கு 30க்கு மேற்பட்ட விதவைக் குடும்பங்கள் இருக்கிறனர். அவர்களுக்கு எந்த கொடுப்பனவுகளும் கொடுக்கப்படுவதில்லை. 

இவர்கள் நாளாந்த கூலிவேலைக்கே சென்று தமது குடும்பத்தை சுமக்கின்றனர். இங்கு விதவைகளாக இருப்பவர்களின்  கணவன்மார் யுத்தத்தில் இறந்திருக்கின்றனர். அதனால் தங்கள் நிலைமைகளை பலரிடம் எடுத்துக்கூறியும் எவரும் கண்டுகொள்ளவில்லை என குறிப்பிடுகின்றனர்.

அதிகரித்திருக்கும் கலாச்சார சீரழிவுகள்

போருக்கு முன்னர் இந்தக் கிராமத்தில் இவ்வாறான கலாச்சார சீரழிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. போருக்கு பின்னரே பல கலாச்சார சீரழிவுகளை கண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் அப்பகுதி வீடுகளில் வாடகைக்கு குடியமர்கின்றார்கள். இதனால் கழியாட்டம்,போதைப்பொருள் பாவனை,போன்றன அதிகரித்திருக்கின்றன. 

அத்தோடு கிராமத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் விடுதி மூலம் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டு  இரண்டு தடவைகள் குறித்த விடுதி தடைசெய்யப்பட்டது. தற்போது மீண்டும் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இந்த கிராமத்தில் நிலவி வந்த குடிநீர்ப்பிரச்சினை ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகள்மூலம் தற்காலிகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மக்களின் துயரப்பிரச்சினைகளில் ஒன்று ஓரளவிற்கு குறைந்திருக்கின்றது. 

இதன் பின்னர் இன்று அப்பகுதி கிராமங்களுக்கு பல அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு செல்லுகின்ற தன்மையைக காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரைக்கும் பல அரசியல் கட்சிகளிடம்  இது தொடர்பாக முறையிட்டாலும் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. 

இன்று தேர்தல் காலங்கள் நெருங்க வேகமாக செல்லுகின்ற நிலைமையை காணலாம் இன்று துன்பங்களில் மூழ்கியிருக்கும் இவர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா? இதனை தமிழ் அரசியல் தலைவர்களும் புலம்பெயர் உறவுகளும் கவனத்தில் எடுப்பார்களா?
0 Responses